சென்னை: தமிழ்நாட்டில் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களுக்கு சட்டமன்றத்தில் மீண்டும் ஒப்புதல் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
நவம்பர் 18ஆம் தேதி சட்டமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறப்படும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து சட்டப்பேரவைச் செயலா் கி.சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தலைமைச் செயலகத்திலுள்ள பேரவை மண்டபத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்குகிறது என்றும் அதற்கான உத்தரவை சட்டமன்றத் தலைவா் மு.அப்பாவு பிறப்பித்துள்ளாா் என்றும் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு சமயங்களில் நிறைவேற்றப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை என்று தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.
மசோதாக்களை ஆளுநா் கிடப்பில் போட்டிருப்பதாகக் கூறி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு, ‘மசோதாக்களை ஆளுநா் காலவரையறையின்றி கிடப்பில் போடுவது மிகவும் கவலைக்குரியது’ என்று அண்மையில் கருத்து தெரிவித்ததாக தினமணி தகவல் வெளியிட்டிருந்தது.
அத்துடன், வரும் 20ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது, மத்திய அரசின் சாா்பில் தலைமை வழக்குரைஞா் அல்லது அவருக்குப் பதிலாக அரசு வழக்குரைஞா் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற வழக்கு விசாரணைக்கு இடையே ஆளுநா் ஆா்.என்.ரவி தனது வசமிருந்த 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, இந்த மசோதாக்களுக்கு சட்டமன்றத்தில் மீண்டும் ஒப்புதல் பெறவே சிறப்புக் கூட்டம் கூட்டப்படவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் இதனை தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இந்த மசோதாக்களுடன் மேலும் சில மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிகிறது.

