தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உயர் அதிகாரி ஒருவருக்காக ஆயிரம் பயணிகளை அலைக்கழித்த கொடுமை: வெங்கடேசன் எம்பி கடும் தாக்கு

2 mins read
643c9493-a129-48c9-9064-d722cbc09142
சு.வெங்கடேசன். - படம்: ஊடகம்

சென்னை: ரயில்வே உயர் அதிகாரி ஒருவருக்காக பாண்டியன் விரைவு ரயில் வேறு நடை மேடைக்கு மாற்றப்பட்டதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் அலைக்கழிக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளதாக அறிக்கை ஒன்றில் அவர் சாடியுள்ளார்.

“கடந்த 16ஆம் தேதி சென்னை ரயில் நிலையத்துக்கு வந்தபோது, வழக்கமாக பாண்டியன் விரைவு ரயில் வேறு நடைமேடையில் இருந்து செல்வதை அறிந்தேன்.

“இவ்வாறு மாற்றப்படுவது இதுவே முதல் முறை. இதனால் சுமார் ஆயிரம் பயணிகள் இங்குமங்குமாக அலைக்கழிந்து படிக்கட்டில் ஏறி அடுத்த நடைமேடையை நோக்கி போய்க்கொண்டிருந்தார்கள்.

“வயதானவர்கள், கைக்குழந்தையோடு வரும் தாய்மார்கள் எல்லாம் பரிதவிப்போடு விரைந்து கொண்டிருந்தார்கள். என்ன காரணம் என்று விசாரித்தபோது ரயில்வே வாரிய உறுப்பினர் ரூப் நாராயண் சங்கர் என்பவர், ராமேசுவரத்துக்கு ஆய்வுக்காகச் செல்கிறார் என்றும் அவருக்காகத்தான் இந்த மாற்றம் என்றும் குறிப்பிட்டார்.

“கட்டுமானப்பணி, தண்டவாள பழுது நீக்கும் பணி நடைபெறுகிறது என்றால் வேறு நடைமேடைக்கு ரயில்கள் மாற்றப்படுவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒரு மனிதருக்காக பத்து பெட்டிகள் கொண்ட முழு ரயில் புறப்படும் நடைமேடை மாற்றப்பட்டுள்ளது,” என சு.வெங்கடேசன் சுட்டிக்காட்டி உள்ளார்.

தனி மனிதர் ஒருவருக்கு படிக்கட்டுகளில் மேலேறி இறங்கி, அடுத்த நடைமேடைக்குச் செல்லும் சிரமத்தைக் கொடுக்காமல் வசதி செய்துதரப்பட வேண்டும் என்பதற்காக சுமார் ஆயிரம் பயணிகள் பயணிக்கும் பாண்டியன் விரைவு வண்டியை அடுத்த நடைமேடையில் நிறுத்தி மக்களை அலைக்கழித்தது கொடுமை என்றும் மதுரை எம்பி விமர்சித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்