தகுதியற்ற இணைப் பேராசிரியர்கள் 56 பேர் அதிரடிப் பணிநீக்கம்; போலி சான்றிதழ் கொடுத்த ஊழியர்கள் மீதும் நடவடிக்கை

1 mins read
e9a85f72-82d0-4206-a35d-e8794e367ad3
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம். - படம்: ஊடகம்

கடலூர்: இணை பேராசிரியர்கள் 56 பேரை பணிநீக்கம் செய்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பரபரப்பையும் விவாதங்களையும் எழுப்பி உள்ளது.

அண்மையில் இப்பல்கலைக்கழகத்தில் போதிய கல்வித் தகுதி இல்லாதவர்கள் இணை பேராசிரியர்களாகப் பணியாற்றி வருவதாக புகார்கள் எழுந்தன.

இது குறித்து மாநில உயர் கல்வித்துறை விசாரணை மேற்கொண்டது.

அப்போது, பலர் தகுதி இன்றி இணை பேராசிரியர்களாகப் பணியாற்றுவது தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, 56 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பல ஊழியர்கள் போலி சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை அளித்து இப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களும் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பல்கலைக்கழக ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது. சமூக ஊடகங்களிலும் இது குறித்து விவாதங்கள் தொடங்க உள்ளதாக தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்