தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை: இளையர்களுக்கு தர்ம அடி

1 mins read
5aaef2d6-a5df-49d9-9c8b-1fb1471d1580
கைதான இளையர்கள். - படம்: ஊடகம்

விழுப்புரம்: ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு இளையர்களுக்கு தர்ம அடி விழுந்தது.

நாகப்பட்டினம் மாவட்டம் வெள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் கன்னியாகுமரியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் ஹோமியோபதி மருத்துவ மேற்படிப்பு மேற்கொண்டுள்ளார்.

அண்மையில் சென்னையில் உள்ள கணவரைப் பார்த்துவிட்டு மீண்டும் கன்னியாகுமரிக்கு ஆம்னி பேருந்தில் புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், அதே பேருந்தில் ஏறிய இரண்டு இளையர்கள் மது போதையில் அம்மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

மாணவியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இருவரும் தொடர்ந்து சீண்டியதை அடுத்து, அவர் பேருந்து ஓட்டுநர், நடத்துநரிடம் புகார் தெரிவித்தார். ஆனால் இருவரும் அதைக் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து, தனது உறவினர்களுக்கு அவர் தகவல் தெரிவிக்க, அவர்கள் பேருந்தில் சென்றுகொண்டிருக்கும் பகுதியைத் தெரிந்துகொண்டு உடனடியாக காரில் புறப்பட்டனர்.

சில நிமிடங்களில் விழுப்புரம் பகுதியில் அந்த பேருந்து செல்வதைக் கண்டுபிடித்து அதை தடுத்து நிறுத்தினர். பின்னர் பேருந்துக்குள் ஏறி மது போதையில் இருந்த இளையருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

பிறகு இருவரும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். சினிமா பாணியில் இந்தச் சம்பவம் அரங்கேறியது.

பெண்களிடம் அத்துமீறினால் உரிய நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்படும் என்றும் பாலியல் தொல்லை கடும் குற்றமாகக் கருதப்படும் என்றும் காவல்துறை கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்