சென்னை: பிரபல ஜவுளிக் கடையிலும் தொழிலதிபர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.
வரி ஏய்ப்பு தொடர்பான புகார்களை அடுத்து, சோதனை நடத்தப்பட்டதாகவும் பத்து இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டதாகவும் ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
சென்னை கே.கே.நகர் பகுதியில் இயங்கி வரும் ‘வஸ்த்ரா’ ஜவுளிக்கடையின் உரிமையாளர்கள் வருமானத்தைக் குறைத்து கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்தக் கடையில் வியாழக்கிழமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதேபோல், கணக்காய்வாளர் ராஜேஷ் என்பவரின் வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
மேலும், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பிரகாஷ், நாகேஷ், தினேஷ் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை முதல் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அந்த அதிகாரிகள் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்ததாகவும் சோதனையின்போது போலி ரசீதுகள், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஊடகத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தொழிலதிபர்கள் பிரகாஷ், நாகேஷ், தினேஷ் ஆகியோர் வீடுகளில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், தங்க நகைகள், ரொக்கப்பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சோதனை நடவடிக்கையின்போது ஆயுதப்படை காவல்துறை, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் வருமான வரித்துறையின் சோதனை நடவடிக்கை நீடித்து வருகிறது.