அரசுப் பேருந்துப் படிக்கட்டில் பயணம்; தவறி விழுந்த பள்ளி மாணவனின் கால்கள் துண்டாயின

அரசுப் பேருந்துப் படிக்கட்டில் பயணம்; தவறி விழுந்த பள்ளி மாணவனின் கால்கள் துண்டாயின

1 mins read
3a3afe1a-02e3-4682-af39-bdcd589c75fb
மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவன். - படம்: ஊடகம்

சென்னை: அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவனின் கால்கள் மீது பேருந்து சக்கரம் ஏறியதில், இரு கால்களும் துண்டாயின.

அம்மாணவன் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்ததால் இரு கால்களையும் இழந்துள்ளான்.

சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் அட்டூழியம் செய்து வருகின்றனர். பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடியும், பேருந்து மேற்கூரை மீதேறி நின்று ஆட்டம் போடுவதும் வாடிக்கையாக நடக்கிறது.

காவல்துறை எச்சரித்த பிறகும் மாணவர்களின் அத்துமீறல்கள் நீடிக்கின்றன.

இந்நிலையில், சென்னை குன்றத்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் சந்தோஷ் நவம்பர் 18ஆம் தேதி மாலை பள்ளி முடிந்ததும் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாகத் தெரிகிறது.

பல மாணவர்கள் இவ்வாறு தொங்கியதால் இடநெருக்கடி ஏற்பட்டு சந்தோஷ் ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்துள்ளான். இதில் பேருந்தின் பின்பக்க சக்கரம் மாணவன் சந்தோஷின் இருகால்கள் மீது ஏறி இறங்கியது.

அவனது இரு கால்களும் நசுங்கிப் போயின. எலும்புகளும் சதையும் நசுங்கிச் சிதைந்த நிலையில், தன் கால்களில் இருந்து ரத்தம் கொட்டியதைக் கண்டு அலறித்துடித்தான் அம்மாணவன்.

இதையடுத்து பொதுமக்களின் உதவியோடு காவல்துறையினர் சந்தோஷை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து நிகழ்ந்த அதே நாளில் இரவு அறுவை சிகிச்சை மூலம் அவனது இரு கால்களும் அகற்றப்பட்டன.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரிக்கிறது.

குறிப்புச் சொற்கள்