சென்னை: தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஒன்றின் விசாரணையின்போது தமிழக அரசு இந்தப் பரிந்துரையை முன்வைத்தது.
இதையடுத்து, இத்தகைய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு இதுவே சரியான தருணம் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
கேரளாவில் இருந்து அண்மையில் ஒரு லாரியில் கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள குருவன்கோட்டை கிராமத்தில் கொட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அப்போது தமிழக அரசின் வழக்கறிஞர் செந்தில் குமார் வாதிடுகையில், கேரளாவில் இருந்து விதிகளை மீறி தமிழகத்துக்குள் 75 கிலோ மீட்டர் தூரம் உள்ளே வந்து மருத்துவக் கழிவுகளைக் கொட்டி உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட லாரியை விடுவிக்கக் கூடாது என்றும் வாதிட்டார்.
மேலும், மருத்துவக் கழிவு களைக் கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவதை தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என்றும் மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வருவதற்கு இது சரியான நேரம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழக அரசின் பரிந்துரைக்குப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.