3வது நாளாக சிகிச்சை: விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளதென தகவல்

3வது நாளாக சிகிச்சை: விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளதென தகவல்

1 mins read
1e58dd67-9ab8-4b0b-8c23-394d8772c430
தேமுதிக தலைவர் விஜயகாந்த். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மார்புச் சளி, இடைவிடாத இருமல் காரணமாக கடந்த சனிக்கிழமை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு திங்கட்கிழமை (நவம்பர் 20) 3வது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே. விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் திங்கட்கிழமை அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது விஜயகாந்தின் உடல்நிலை குறித்து கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு தொடர்ந்து இருமல் பாதிப்பு இருந்தது. அதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நானும் அந்த மருத்துவ நிர்வாகத்தோடு பேசினேன்.

“விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருக்கிறது. இன்று காலையிலும் பேசினேன். அவர் நன்றாக இருக்கிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) இருக்கிறாரே தவிர, அவரது உடல்நிலை நன்றாகவே உள்ளது.

“ஏற்கெனவே, அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அதுதொடர்புடைய மருத்துவரே தற்போதைய இருமல் தொடர்பான பிரச்சினைக்கும் மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற நிலையில், அவரை மிகச் சிறப்பாகக் கண்காணித்துக்கொண்டு இருக்கிறார்கள்,” என்றார் அவர்.

இந்நிலையில், விஜயகாந்துக்கு செயற்கைச் சுவாசம் அளிக்கப்படுவதாக வெளியான தவறான செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என்று தேமுதிக திங்கட்கிழமை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்