தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிமுக மேலிடக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி வியூகம்

2 mins read
05c0fad5-71f8-4954-8a0e-07e95f23801b
செவ்வாய்க்கிழமை நடைபெறும் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் என 166 பேர் பங்கேற்கிறார்கள். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப்பணி குறித்து கலந்து ஆலோசிக்கப்படும் என்று அறிக்கை குறிப்பிட்டு உள்ளது.

தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்களிப்பு நிலையங்களில் 65,000 பூத்துகள் உள்ளன. ஒவ்வொரு பூத்திலும் 800 முதல் 1,000 வாக்குகள் இருக்கும்.

இந்த பூத்துகள் ஒவ்வொன்றுக்கும் 20 ஆண்கள் கொண்ட ஒரு குழு, 20 பெண்கள் கொண்ட ஒரு குழு, 25 பேர் கொண்ட இளைஞர்கள், இளம்பெண்கள் குழுவை உருவாக்க அதிமுக திட்டமிடுகிறது.

செவ்வாய்க்கிழமை நடைபெறும் கூட்டத்தில் 83 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் என 166 பேர் கலந்து கொள்கிறார்கள்.

அவர்களிடம் பூத் குழு பட்டியல், பென்டிரைவ் ஆகியவை சேகரிக்கப்படும். அந்த பென்டிரைவ்கள் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் அதை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்வார்கள்.

பூத் குழுவை வைத்து எடப்பாடி பழனிசாமி வகுக்கும் வியூகம் பற்றி கட்சி நிர்வாகிகள் கூறுகையில், “ஒரு பூத்துக்கு 800 முதல் 1000 வாக்குகள்தான் இருக்கும். அதில் பதிவாவது அதிகபட்சமாக 400 முதல் 700 வாக்குகளாகத்தான் இருக்கும்.

“அதிமுக பூத் குழுவில் 65 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். அவர்கள் பரவலாக அனைத்துக் குடும்பங்களையும் சேர்ந்தவர்களாக இருப்பதால் ஒரு குடும்பத்துக்கு சராசரியாக 4 வாக்குகள் வீதம் 260 வாக்குகள் உறுதி.

“இது தவிர ஒவ்வொரு நிர்வாகியும் 20 பேர் வீட்டில் தொடர்பு வைத்து ஆதரவு திரட்ட வேண்டும். இவற்றின் மூலம் 350 முதல் 400 வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என்று எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்,” என்றனர் நிர்வாகிகள்.

குறிப்புச் சொற்கள்