சென்னை: அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அமைச்சா் செந்தில் பாலாஜியின் பிணை கோரும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றது.
இதற்கிடையே, சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுப் பகுதியில் அசெளகரியம், கை, கால்கள் மரத்துப் போகும் நிலை உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக கடந்த வாரம் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பிணை மனு மீதான விசாரணையின்போது மருத்துவக் காரணங்களுக்காக செந்தில் பாலாஜிக்குப் பிணை வழங்க வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும், செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனில் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது என்று அவரது சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் எம்ஆர்ஐ ஸ்கேன் உட்பட மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், பிணை மனு தொடர்பான வழக்கை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமைக்கு (நவம்பர் 28) உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச்சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.