சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமது வீட்டில் உள்ள தமக்குப் பிடித்த ஃபியட் பத்மினி காரை ஓட்டிப் பார்க்க ஆசைப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தமது இல்லத்தில் இருந்து காரை ஓட்டியபடி அடையாறு நோக்கி அவர் சென்றார்.
நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் உள்ளிட்ட மூவர் அந்த காரில் இருந்தனர்.
வழக்கமாக பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க, அவற்றின் நடுவில் சொகுசு காரில் முதலமைச்சராக ஸ்டாலின் முன் இருக்கையில் அமர்ந்து இருப்பார்.
அதையே பார்த்துப் பழக்கப்பட்ட மக்கள் மிகச் சிறிய காரில் அதுவும் அவரே ஓட்டிச் சென்றதைப் பார்த்து வியந்தனர்.
சாலையோரம் நின்றிருந்த பலரும் ஸ்டாலினைப் பார்த்து உற்சாகத்துடன் கை அசைத்தனர். அவரும் பதிலுக்கு கையசைத்தார்.
காரில் இருந்த நண்பர்களி டம் தமது பழைய நினைவுகளை பகிர்ந்தபடியே சென்றுள்ளார். பெசன்ட் நகரில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட 8 கிலோ மீட்டர் ஆரோக்கிய நடைபாதையில் உள்ள இருக்கையில் அமர்ந்து தேநீர் குடித்தார்.
நடைப்பயிற்சிக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஸ்டாலினுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முதல்வர் ஸ்டாலின் கார் ஓட்டிச் செல்லும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.