திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

2 mins read
ffc1953f-b644-438a-b3d2-9c1c0432672c
படம்: - சமூக ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: நடிகைகள் திரிஷா, குஷ்பு உள்ளிட்டோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறை தலைமை அதிகாரிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் வெளியான காணொளி ஒன்றில் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து மிகவும் சர்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திரிஷா, “இவரை போன்றவர்களால்தான் மனிதகுலத்துக்கே அவப்பெயர். இனி தனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன்,” என்றும் கூறியிருந்தார்.

திரிஷாவைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ், நடிகை மாளவிகா மோகனன், கார்த்திக் சுப்பராஜ், குஷ்பு உள்ளிட்டோர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறை தலைமை அதிகாரிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

“நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் தாமாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடுகிறோம்.

“இதுபோன்ற கருத்துகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக கருதத் தூண்டுகின்றன. இது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று,” என்று தேசிய மகளிர் ஆணையம் அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் மேலதிகாரிகளுக்கு இந்த விஷயத்தை கொண்டு சென்றுவிட்டதாகவும் இதுகுறித்து மன்சூர் அலிகான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்