களக்காடு: கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு நிதி நிறுவனத்தின் கிளை திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் உள்ளது.
அண்மையில் தலைமை அலுவலக அதிகாரிகள், களக்காடு கிளையில் கணக்கு விவரங்கள், நகை இருப்பு குறித்து ஆய்வு பணியை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை பெட்டகத்தில் இருந்து எடுத்து அதே போல் போலியாக நகைகளை தயாரித்து உள்ளே வைத்துவிட்டு உண்மையான தங்க நகைகளை நிதிநிறுவன ஊழியர்கள் எடுத்து கொண்டதும், அதனை வேறு ஒரு அடகு கடை நடத்திவரும் நபரின் மூலமாக விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட ரூ.7 1/4 கோடி வரையில் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. அதனால் தலைமை அலுவலக அதிகாரிகள், நெல்லை காவல்துறையில் புகார் மனு அளித்தனர்.
அதன் பின்னர் காவல்துறை அதிகாரிகள் நிதி நிறுவனத்தில் நேரடி விசாரணை மேற்கொண்டனர்.
நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் 2 ஊழியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு 3 பேர் உதவியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் தொடர்புடைய 5 பேரையும் நெல்லை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.