பெண்ணிடம் மனித உரிமை மீறல்; காவல் அதிகாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

பெண்ணிடம் மனித உரிமை மீறல்; காவல் அதிகாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

2 mins read
5b8e1974-e085-465f-b40e-5f86137ecd0d
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம். - கோப்புப் படம்
Google News Preferred Icon

சென்னை: திருநெல்வேலியில் பெண் ஒருவரிடம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஆலங்குளம் தாலுகாவைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் காவல்துறையினர் தம்மிடம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக புகார் கொடுத்திருந்தார்.

அந்தப் புகாரில், “2019ஆம் ஆண்டில் ஆலங்குளம் காவல் துறையினர், நான் கள்ளச்சாராயம் விற்பதாகக் கூறி, என் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். நான் சட்டவிரோதமாக எந்த ஒரு செயலிலும் ஈடுபடவில்லை என்று மன்றாடியும் அவர்கள் விடவில்லை.

“என் வீட்டில் உள்ள பொருள் களைத் தூக்கி எறிந்து சேதப்படுத்தினர். நான் மருத்துவச் செலவுக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.75,000ஐயும் அவர்கள் எடுத்துச் சென்றனர்.

“அத்துடன் விடாமல், என்னை வலுக்கட்டாயமாக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று கீழே தள்ளி, தகாத வார்த்தைகளால் திட்டி லத்தியால் அடித்தனர். இதில் எனக்கு வலிப்பு ஏற்பட்டு மயக்கமுற்றேன். அதையடுத்து ஐந்து நாள்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றேன்.

எனவே, என்னைத் தாக்கி மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,” என்று தனது மனுவில் கூறியிருந்தார்.

அந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் விசாரணையில், சாட்சியம், ஆவணங்களை வைத்துப் பார்க்கையில், மனுதாரரிடம் காவல்துறையினர் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது மனித உரிமை மீறல் ஆகும். எனவே, மனுதாரருக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். இதில், ரூ.50 ஆயிரத்தை அப்போதைய ஆலங்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்த குமாரிடம் இருந்தும், தலா ரூ.25,000ஐ தலைமைக் காவலர்கள் ஜான்சன், சசிகுமார் ஆகியோரிடம் இருந்தும் தமிழக அரசு வசூலித்துக்கொள்ளலாம்.

“அவர்கள் மூன்று பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படுகிறது,” என்று உத்தரவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்