தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை

2 mins read
a3f573e2-019b-46fa-a024-e9e47c8f31ae
மழை நீர் சாலைகளில் தேங்கியதால் சென்னையில் வாகனமோட்டிகள் சிரமங்களுக்கு ஆளாகினர். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிகப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் மேலும் ஒரு புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் விரைவில் கரைக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றார்.

கடந்த 48 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 17 செ.மீ. அளவிலான மழை பெய்துள்ளது என்றும் ஈரோடு மாவட்டத்திலும் அதிக மழை பதிவாகி உள்ளது என்றும் தெரிவித்தார்.

“வரும் 26ஆம் தேதி அந்தமான் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக கூடும் இது புயலாக மாறுமா என்பது இனிதான் தெரியவரும்.

“வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் இப்போது வரை 24 செ.மீ.மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 15% குறைவு. சென்னையில் இயல்பை விட 30% அளவிற்கு குறைவான மழை பதிவாகியுள்ளது,” என்று பாலசந்திரன் மேலும் கூறினார்.

இதற்கிடையே, கனமழை காரணமாக சென்னையில் விமானச் சேவை பாதிக்கப்பட்டது. செவ்வாய்கிழமை மாலை முதல் புதன்கிழமை காலை வரை சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 12 அனைத்து விமானங்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்வதால் விமானப் பயணிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது என்றும் இதனால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. திருப்பூரில் செவ்வாய் கிழமை இரவு பெய்யத்தொடங்கிய மழை விடிய விடிய நீடித்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது என்றும் தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே போல் ஈரோட்டிலும், இரவில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக அன்னை சத்தியா நகர், மல்லி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மேலும் சில நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என்பதற்கான ஆரஞ்சு எச்சரிக்கை குறியீடு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த இரு நாள்களாக காலை முதல் மாலை வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் வாகனமோட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்