நகைக்கடைகளில் அதிரடிச் சோதனை நடவடிக்கை

2 mins read
e9b6a8de-d166-45fc-910b-2bc42fdcaac6
வருமான வரித்துறையின் சென்னை அலுவலகம். - படம்: ஊடகம்

சென்னை: கடந்த இரு நாள் களாக சென்னையிலும் திருச்சி யிலும் உள்ள நகைக்கடைகளில் அமலாக்கத் துறையினரும் வருமான வரித்துறை அதிகாரி களும் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

நகைக் கடைகளின் உரிமையாளர்களின் வீடுகள், அவர்களுடன் தொடர்புடைய மற்ற இடங்களிலும் சோதனை நடைபெற்றதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்ட விரோதப் பணப் பரிமாற்றம், வரி ஏய்ப்பு தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட நகைக்கடைகள், பட்டறைகள், தங்க நகை மொத்த வியாபாரிகள் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுவதாக வருமான வரித்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, 500 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு நடந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, தற்போது, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபடுவது பற்றி, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கடந்த இரு தினங்களாக சென்னையில் உள்ள நகைக் கடைகளின் உரிமையாளர் வீடு களில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், ஆறு இடங்களில் இருந்து முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளதாக தினமலர் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

திருச்சி, பெரிய கடை வீதியில் உள்ள சக்ரா செயின் ஜுவல்லரி, சூர்யா ஜுவல்லரி, ஜாபர்ஷா தெருவில் உள்ள ரூபி ஜுவல்லரி, விக்னேஷ் ஜுவல்லரி ஆகிய மொத்த வியாபாரக் கடைகள், உரிமையாளர்கள் வீடு களில் அமலாக்கத்துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர் என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய சில நாள்களில் இக்கடைகளில் அதிக அளவில் வியாபாரம் நடந்துள்ளதை அடுத்து, வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம் வாங்கப்பட்டதா என அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதி களிலும் தொழிலதிபர்களைக் குறிவைத்து வருமான வரித்துறை அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழக அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்களும் அமலாக்கத் துறையின் கண்காணிப்புக்கு ஆளாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சோதனை நடவடிக்கைகளை அடுத்து சம்பந்தப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நடவடிக்கை நீடிக்கும் என அமலாக்கத் துறை, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்