விளையாட வேண்டாம்: மன்சூர் அலிகானுக்கு நீதிபதி கண்டிப்பு

விளையாட வேண்டாம்: மன்சூர் அலிகானுக்கு நீதிபதி கண்டிப்பு

2 mins read
ece16494-7fd4-4126-bcac-56e275c40316
நடிகர் மன்சூர் அலிகான். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: நடிகை திரிஷா குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் விசாரணைக்கு வருமாறு நடிகா் மன்சூா் அலிகானுக்கு காவல்துறை அழைப்பாணை வழங்கி இருந்த நிலையில் அவர் விசாரணைக்குச் செல்லவில்லை.

நடிகை திரிஷா குறித்து நடிகா் மன்சூா் அலிகான் சா்ச்சைக்குரிய வகையில் அண்மையில் பேசினாா். இந்தப் பேச்சுக்கு திரைத் துறையில் இருந்து மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும் எதிா்ப்புகளும் எழுந்தன.

மன்சூா் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு தேசிய மகளிா் ஆணையம் நவம்பர் 20ஆம் தேதி பரிந்துரை செய்தது.

அதன் அடிப்படையில், மன்சூா் அலிகான் மீது ஆயிரம்விளக்கு அனைத்து மகளிா் காவல்துறையினர் இரு பிரிவுகளின்கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

இது தொடா்பாக அவரிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டனா். இதற்காக நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மன்சூா் அலிகான் வீட்டுக்கு புதன்கிழமை நேரில் சென்ற காவல்துறையினர், அவரிடம் அழைப்பாணை வழங்கினா்.

இந்த அழைப்பாணையின்படி, மன்சூா் அலிகான் வியாழக்கிழமை (நவம்பர் 23) விசாரணைக்கு வர வேண்டும் என்று காவல்துறை தெரிவித்திருந்தது.

ஆனால், தொண்டைப் பிரச்சினை காரணமாக பேசமுடியாததால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருவதாகவும் காவல் துறைக்கு மன்சூர் அலிகான் கடிதம் எழுதியிருந்தார்.

முன்னதாக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மன்சூர் அலிகான் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகலில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்குச் செல்லப் போவதாகவும் முன் பிணை மனுவை திரும்பப் பெற்றுவிட்டதாகவும் மன்சூர் அலிகான் திடீர் என்று அறிவித்தார். பின்னர் முன்பிணை கோரிட புதிய மனுவை அவர் தாக்கல் செய்தார்.

அவரது முன்னுக்குப் பின் முரணான இச்செயலைக் கண்டித்த நீதிபதி அல்லி, “நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல. நேரத்தை வீணடிக்க வேண்டாம்,” என்றார். மன்சூர் அலிகானின் புதிய முன்பிணை மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

குறிப்புச் சொற்கள்