கருத்து மோதல் வலுக்கும் நிலையில் தமிழ்நாட்டைப் பாராட்டிய ஆளுநர் ரவி

1 mins read
85b9d227-42db-49dd-9c9e-3703bbfb2e5c
ஆளுநர் ஆர்.என்.ரவி. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகம் மிகவும் பாதுகாப்பானது என்று தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

நேரு யுவ கேந்திரா சார்பில் 15வது தேசிய பழங்குடியினர் இளைஞர் விழா சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள அரசு இளையோர் விடுதியில் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், “இந்தியாவில் 10 கோடிக்கும் மேல் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பழங்குடியின மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல்லாயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது.

“தமிழ் மொழி மிகவும் பழமையானது. இந்த விழாவில் ஜார்க்கண்ட், ஒடிசா, மகராஷ்டிரா ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். பிற மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இங்கிருந்து போகும் போது குறைந்தது 12 தமிழ் வாக்கியங்களை கற்றுக்கொள்ளுங்கள். பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பான மாநிலமாக உள்ளது,” என்று ஆளுநர் ரவி கூறினார்.

தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே பல்வேறு கருத்து மோதல் வெடித்து வரும் நிலையிலும் தமிழக அரசு குறித்தும் திமுகவின் கொள்கைகள் குறித்தும் அவ்வப்போது மறைமுகமாக விமர்சித்து ஆளுநர் ரவி பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையிலும் தமிழ்நாட்டை ஆளுநர் பாராட்டி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்