சர்ச்சையில் சிக்கிய குஷ்பு: கடும் கண்டனம், போராட்டம் அறிவிப்பு

2 mins read
45f1b2ef-b79b-45ce-8073-f364f85c8a78
நடிகை குஷ்பு. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவின் தலைவரும் எம்.பி.யுமான ரஞ்சன் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் இணையவாசி ஒருவர் குஷ்புவிடம் சரமாரியாக கேள்வி கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்த குஷ்பு, ‘ஒரு பெண்ணை அவமதிக்கவும் மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

“சேரி மொழி என்று பேசி பட்டியலின மக்களை நேரடியாக குஷ்பு அவமதித்துள்ளார். மக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்த பிறகும்கூட தன் தவறுக்கு மன்னிப்பு கேட்காமல், பூசி மெழுகும் வேலையை செய்யத் தொடங்கியிருக்கிறார். சேரி என்ற வார்த்தைக்கு பிரெஞ்சு மொழியில் அன்பு என்று அர்த்தமாம். அதைத்தான் பயன்படுத்தினாராம். யாரை ஏமாற்ற குஷ்பு கபட நாடகமாடுகிறார்?

“குஷ்புவின் தரக்குறைவான பேச்சால் பட்டியலின மக்கள் மனது புண்பட்டுப் போயிருக்கிறது. தமது தவற்றை திருத்திக் கொண்டு அந்தப் பதிவை உடனடியாக குஷ்பு நீக்க வேண்டும். அதோடு அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், லட்சக்கணக்கான பட்டியலின மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்,” என்று அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே, சேரி என்றால் அன்பு என குஷ்பு அளித்த விளக்கத்துக்கு பலர் கெட்ட வார்த்தைகளைக் கூறி அதற்கு வேறு மொழியில் அர்த்தம் கூறி வருகிறார்கள்.

காயத்ரி ரகுராம் கூறுகையில், சேரிக்கு அன்பானவர் என பிரெஞ்சில் அர்த்தம் எடுத்துக் கொண்டால், மன்சூர் அலிகான் கூறிய ‘ரேப்’ என்ற வார்த்தைக்கு ஏன் ‘நாளை’ என்ற அர்த்தத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார்.

குணச்சித்திர நடிகை வினோதினியும் குஷ்புவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நடிகை திரிஷாவுக்காகக் குரல் கொடுக்கிறேன் என்ற பெயரில் தற்போது பெரிய சர்ச்சையில் குஷ்பு சிக்கிவிட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்