தமிழ்நாட்டில் விவசாய நிலங்களின் பரப்பளவு 36 விழுக்காடாக சுருங்கிவிட்டது: அன்புமணி

தமிழ்நாட்டில் விவசாய நிலங்களின் பரப்பளவு 36 விழுக்காடாக சுருங்கிவிட்டது: அன்புமணி

1 mins read
e4e90dea-ba62-4e02-aa97-0079d710e0a7
மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி பாமக நடத்திய போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி பாமக சார்பில் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமையில் மேல்மா கூடுரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி பேசுகையில், “முன்னேற்றம் என்ற பெயரில் விவசாயத்தையும் விளைநிலங்களையும் அழிப்பது ஏமாற்று வேலை. அதைக் கண்டிக்கின்றேன்.

“தமிழ்நாட்டில் கடந்த 45 ஆண்டுக்கு முன்பு விவசாய நிலத்தின் பரப்பளவு 48 விழுக்காடாக இருந்தது. இப்போது 42 லட்சம் ஏக்கர் விளைநிலம் அழிக்கப்பட்டுள்ளதால் 36 விழுக்காடாகக் குறைந்து உள்ளது.

“விவசாயத்தை அழித்தால் சோற்றுக்கு எங்கே போகப்போகிறோம். அந்த யோசனைகூட உங்களுக்கு இல்லையா? கும்மிடிப்பூண்டியில் அறிவுசார் நகரம் தொடங்கியுள்ளனர். அங்கு 1,700 ஏக்கர் விளைநிலம் பாதிக்கப்படுகிறது. விளைநிலங்களை அழித்துத்தான் இவற்றைத் தொடங்க வேண்டுமா?

“இதனை எதிர்த்துப் போராடினால் குண்டர் சட்டத்தில் கைது செய்வதா? மண்ணைக் காக்கப் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும்,” என்றார்.

இந்நிலையில், ‘மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் -2023ஐ கைவிட வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தஞ்சாவூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதனையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்