சென்னை: டாஸ்மாக் மது விற்பனை வருமானத்தில்தான் அரசு செயல்படுவதாக கூறுவது தவறு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் நடைபெறும் அனைத்துலக கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு உறுதியளித்தது.
முன்னதாக மதுபானங்கள் பரிமாற தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கருத்தரங்குகளில் மது விநியோகிக்க அனுமதித்தால், சாதி அமைப்புகள், அரசியல் கட்சி மாநாடுகளிலும் மது விநியோகிக்கக் கோருவர் என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதை விசாரித்த தலைமை நீதிபதி, அனைத்துலக கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது மதுபானம் விநியோகிப்பது சட்டத்துக்கு எதிரானது என கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்துள்ள தமிழக அரசு, மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளில் மதுபானங்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், டாஸ்மாக் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் அரசு செயல்படுகிறது என்பதையும் தமிழக அரசு வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்தார்.

