மணல் குவாரி முறைகேடு: விசாரணைக்கு முன்னிலையாக அழைப்பாணை; எதிர்த்து வழக்கு தொடுத்த மாவட்ட ஆட்சியர்கள்

மணல் குவாரி முறைகேடு: விசாரணைக்கு முன்னிலையாக அழைப்பாணை; எதிர்த்து வழக்கு தொடுத்த மாவட்ட ஆட்சியர்கள்

2 mins read
f4c56c8e-c68c-49fb-8dea-621f9f08fc06
அண்மையில் மணல் குவாரிகளில் சோதனை நடத்தப்பட்டது. - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் மணல் குவாரிகள் பலவும் சட்டவிரோதமாகச் செயல்படுவதாக பரவலாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இம்முறைகேடுகள் தொடர்பாக நடைபெறும் வழக்கு விசாரணைக்கு நேரில் முன்னிலையாகுமாறு பத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இதை எதிர்த்து தமிழக அரசும் ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

குவாரிகள் முறைகேடுகளின் மூலம் கிடைத்த வருமானத்தின் மூலம் பல்வேறு சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக அமலாக்கத்துறை கருதுகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள மணல் குவாரிகள், குவாரி அதிபர்களின் வீடுகள், சேமிப்புக் கிடங்குகளில் கடந்த செப்டம்பர் மாதம் அத்துறையின் அதிகாரிகள் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரொக்கப் பணம், நகைகள் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக பத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் விசாரணைக்கான அழைப்பாணையை அனுப்பியது அமலாக்கத்துறை.

எனினும் இதை ஏற்காத தமிழக அரசு, திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கனிமவள கொள்ளை தொடர்பாக ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகச் சுட்டிக்காட்டி உள்ள தமிழக அரசு, அங்கெல்லாம் சென்று நடவடிக்கை எடுக்காத அமலாக்கத் துறை அதிகாரிகள், தமிழகத்தில் மட்டும் வரம்பு மீறி சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருவதாகச் சாடி உள்ளது.

தமிழக அரசின் மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது உயர் நீதிமன்றம். நவம்பர் 27ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.

பத்து மாவட்ட ஆட்சியர்களும் நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலையாவது குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் எனத் தெரிகிறது. இதனால் அரசு வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்