சென்னை: ஐந்து ரூபாய் இருந்தால் சென்னை மெட்ரோ ரயில்களில் ஏறி சென்னையைச் சுற்றிப்பார்க்க முடியும். இப்படியொரு சலுகையை அறிவித்துள்ளது மெட்ரோ ரயில் நிறுவனம்.
சென்னை மெட்ரோ ரயில் சேவையை பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்த வேண்டும் என அதன் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவையைப் பிரபலப்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, சலுகைகளையும் அறிவித்து வருகிறது.
அந்த வகையில் எதிர்வரும் டிசம்பர் 3ஆம் தேதி சென்னை மெட்ரோ நிறுவனம் உருவாக்கப்பட்ட நாள் என்பதால், அதை முன்னிட்டு ‘ஐந்து ரூபாய் சலுகைப் பயணம்’ என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் பேடிஎம், வாட்ஸ்அப், ஃபோன்பே, இணையத்தளம் மூலம் பயணச்சீட்டு பெறுபவர்கள், வெறும் ஐந்து ரூபாய் செலுத்தி மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொள்ள முடியும்.
“மின்னிலக்க முறையில் பணம் செலுத்துவதை ஊக்கப்படுத்தவும் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சலுகைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.