சென்னை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலும் புதுவையிலும் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெற வேண்டும் என்று அக்கட்சித் தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க. ஸ்டாலின் திமுகவினரிடம் தெரிவித்து உள்ளார்.
தாம் செல்லும் இடங்களில் எல்லாம் மகளிரின் உண்மையான அன்பைக் காண முடிவதாகவும் இனி எந்தக் காலத்திலும் பெண்களின் வாக்குகள் திமுகவிற்குதான் என்பதில் எள் முனையளவும் சந்தேகமும் தேவையில்லை என்றும் சென்னையில் நடைபெற்ற தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கி விடியல் பயணம் வரை மகளிருக்கு என நடப்பு திமுக அரசு பல்வேறு பயனுள்ள திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது மக்களிடம் இது குறித்து விரிவாக எடுத்துக் கூற வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.
“நாம் கை காட்டுபவர்தான் நாட்டின் பிரதமராக வேண்டும் என்றால் தமிழகத்திலும் புதுவையிலும் உள்ள 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.’
“தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு யாருக்கு உள்ளதோ அவரே வேட்பாளராகக் களம் இறங்குவார். இந்த தொகுதிக்கு இவர்தான் என்று எதுவும் இல்லை.
“திமுக இளையரணியின் செயலாளராக கடந்த 2019ஆம் ஆண்டு உதயநிதி பொறுப்பேற்ற பிறகு அந்த அணியின் பணிகள் பன்மடங்கு வேகமெடுத்து இருக்கின்றன. இன்றைய தேதியில் 25 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட வலுவான படையாக இளையர் அணி திகழ்கிறது,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
புதிய வாக்காளர்களை ஈர்க்கும் எஃகுக் கோட்டையாக திமுக திகழ்வதாகக் குறிப்பிட்ட அவர், சேலத்தில் நடைபெற உள்ள திமுக மாநாட்டில் இளையரணி தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியில் இருந்தும் தலா ஆயிரம் இளையர்களாவது அம்மாநாட்டில் பங்கேற்பதை இளையரணி உறுதி செய்ய வேண்டும் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
இதற்கிடையே திமுக இளையர் அணி மாநாட்டு ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் கே.என். நேரு நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்து லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்டமான மாநாடாக இது நடத்தபட வேண்டும் என திமுக தலைவருமான ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திமுக இளையரணி செயலாளராக 35 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போதுதான் அந்த அணியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதன் பின்னர் எதிர்வரும் டிசம்பர் 17ஆம் தேதி தான் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது.
இதற்கிடையே, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்துதான் விரிவாக அலசப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்ததாகவும் தெரிகிறது.
திமுக அமைச்சர்கள்,முக்கிய பிரமுகர்கள் மீது மத்திய அமலாக்கத்துறை பல்வேறு சோதனை, விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது.

