கார்த்திகை மகாதீபம்: பக்தர்கள் முண்டியடித்ததில் சுவர் இடிந்தது; தடுப்பு வேலி உடைப்பு

கார்த்திகை மகாதீபம்: பக்தர்கள் முண்டியடித்ததில் சுவர் இடிந்தது; தடுப்பு வேலி உடைப்பு

1 mins read
5bb80098-95f4-4dc0-b987-466f98f8ffd3
மகாதீபம் காண ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். - படம்: தமிழக ஊடகம்

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவில் பக்தர்கள் முண்டியடித்ததில் கல்லூரிச் சுவர் இடிந்து விழுந்து 10 பேர் காயமடைந்தனர்.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. கார்த்திகைத் தீபத்திருவிழாவையொட்டி இங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

மகாதீபம் ஏற்றப்படுவதைக் காண 2,500 பக்தர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கான அனுமதிச்சீட்டு அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் விநியோகிக்கப்பட்டது.

அனுமதிச்சீட்டைப் பெற அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சீட்டு விநியோகம் தொடங்கியதும் அதனைப் பெற பக்தர்கள் முண்டியடித்ததால் பக்தர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சில பக்தர்கள் கல்லூரியின் சுற்றுச்சுவர் மீது ஏறிக் குதித்தனர். அப்போது சுவர் இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் 10க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து வரிசையில் நிற்க அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளும் உடைக்கப்பட்டன. இதனால் பக்தர்களைத் தடுக்கக் காவல்துறையினர் திணறினர்.

குறிப்புச் சொற்கள்