தஞ்சை: ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்ளும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்தார். திருவையாறு தொகுதிக்கு உட்பட்ட நடுக்காவிரியில் நடைப்பயணத்தை தொடங்கினார்.
முன்னதாக, நடுக்காவிரி குடமுருட்டி ஆற்றில் மலர் தூவி ஆரத்தி எடுத்து அவர் வழிபட்டார்.
பின்னர், கருப்பூரில் வயலில் பெண்கள் நடவு செய்து கொண்டிருந்ததைப் பார்த்தார். அவர்களுடன் அண்ணாமலையும் வயலில் இறங்கி நாற்றங்கால்களை நடவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெல்டா மாவட்டங்களில் 2022 செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் 8 ஆம் தேதி வரை 8.25 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
“இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3 லட்சம் டன் குறைந்து, 5.25 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
“காவிரியில் தண்ணீர் இல்லாததால் மகசூல் குறைந்து, கொள்முதல் குறியீடும் குறைந்துவிட்டது. காவிரியில் தண்ணீர் வராவிட்டால், என்னவாகும் என்பதற்கு இந்த ஒரு ஆண்டு குறியீடே சாட்சி,” என்றார்.

