அரசுப் பள்ளிகளுக்கு 5 ஆண்டுகளில் 18,000 வகுப்பறைகள் கட்ட வேண்டும் என இலக்கு: அன்பில் மகேஸ்

அரசுப் பள்ளிகளுக்கு 5 ஆண்டுகளில் 18,000 வகுப்பறைகள் கட்ட வேண்டும் என இலக்கு: அன்பில் மகேஸ்

2 mins read
081522fb-f337-4606-b208-a29fe57ba2dc
அன்பில் மகேஸ். - படம்: ஊடகம்

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 18,000 வகுப்பறைகள் கட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இரவு பகல் பாராமல் உழைப்பதாக அவர் புகழாராம் சூட்டினார்.

முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் நாணயம், தொல்லியல், கல்வி கண்காட்சியுடன் கூடிய முப்பெரும் அரசு விழாவை அவர் தொடங்கி வைத்தார்.

இந்தக் கண்காட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறை பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில் 4,200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் பயன்படுத்திய பல்வேறு பொருள்கள் இடம் பெற்றுள்ளன.

இவ்விழாவில் பேசிய அன்பில் மகேஸ் பள்ளிக்கல்வி துறை தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட புதிய திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதுவரை 113 தொகுதிகளில் உள்ள பள்ளிகளில் தாம் ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும் ‘ஒரு பள்ளியில் ஒரு வகுப்பறை’ என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதம், கற்றல் திறன்கள் குறித்து ஆய்வு செய்வதாகவும் அவர் கூறினார்.

‘பள்ளிக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஏற்கெனவே ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஆயிரம் வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஆயிரம் வகுப்பறைகள் விரைவில் திறக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

“அடுத்த ஐந்து ஆண்டுகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும். இதற்காக பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.7,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்,” என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

அரசுப் பள்ளிகளுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளும் படிப்படியாக செய்து கொடுக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், இதற்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.

குறிப்புச் சொற்கள்