தலைவரை மாற்று: காங்கிரஸ் கட்சிக்குள் குமுறல்

தலைவரை மாற்று: காங்கிரஸ் கட்சிக்குள் குமுறல்

1 mins read
e02985ee-491c-44c0-a25c-ff5dad59fbc1
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கே.எஸ். அழகிரியை மாற்ற வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

கே.எஸ். அழகிரியை தலைவர் பதவியில் இருந்து நீக்க முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இது தொடர்பாக பலமுறை டெல்லி சென்றும் முறையிட்டுள்ளார்கள். ஆனால் இதுவரை டெல்லி மேலிடம் அந்தக் கோரிக்கையைக் கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளையில் சனிக்கிழமை நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி சென்றார்.

அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலக வாயிலில் மகளிர் அணியினர் கறுப்பு உடை அணிந்து அமர்ந்து இருந்தனர்.

இதற்கிடையில், கே.எஸ். அழகிரியை மாற்ற வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் கட்சியின் மூத்த தலைவர்களை அழகிரி புறக் கணிக்கிறார்.

“கூட்டங்களுக்கு எல்லோரையும் அழைப்பதில்லை. அவர் ஐந்தாண்டுகள் தலைவராக இருந்துவிட்டதால் சோர்வும் சுணக்கமும் அவரிடம் இருக்கிறது. வேகமாகச் செயல்படுவதில்லை,” என்றார்.

குறிப்புச் சொற்கள்