சென்னை: பெண் செய்தியாளர்கள் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறாகப் பதிவிட்டது தொடர்பாக நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரியுள்ளார். இதையடுத்து அவர் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக ஊடகங்களில் தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டிருந்தது. அந்தப் பதிவை எஸ்.வி.சேகர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோபால்சாமி என்பவர் நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு பின்னர் சென்னையில் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக கோபால்சாமி கூறியதை அடுத்து, எஸ்.வி.சேகர் மீதான வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.