சென்னை: சட்டவிரோத மணல் குவாரிகள், மணல் விற்பனை மூலம் சுமார் ரூ.4,500 கோடி அளவில் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின்போது, மணல் குவாரி விவகாரத்தில் தொடர்புடையோரைப் பாதுகாக்க தமிழக அரசு முயற்சி செய்வதாக அமலாக்கத் துறை தரப்பில் பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டது.
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளுவது, அதிக தொகைக்கு மணல் விற்கப்படுவது, இதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவது என மணல் குவாரிகளைக் கொண்டு சில தரப்பினர் பெரும் முறை கேடுகளில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து அமலாக்கத்துறை இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தியதுடன், கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் 34 இடங்களில் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டது. மணல் குவாரி உரிமையாளர்கள், சில தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்கப் பணம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
“இந்தச் சோதனையைத் தொடர்ந்து 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மைப் பொறியாளர் முத்தையா ஆகி யோரை விசாரணைக்கு முன்னிலையாகும்படி அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியது.
அதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து. மாவட்ட ஆட்சியர்களுக்கு அழைப்பாணை அனுப்ப அமலாக்கத் துறைக்கு அதிகார வரம்பு இல்லை என்றும் மாநில அரசு அதிகாரிகளைத் துன்புறுத்தும் நோக்கிலும் அரசு நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கிலும் அமலாக்கத் துறை செயல்படுகிறது என்றும் அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
“தமிழகம் முழுவதும் உள்ள 28 குவாரிகளில் நடத்திய சோதனையில், 27.70 லட்சம் யூனிட் மணல் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதிக மணல் எடுத்ததன் மூலம், ரூ.4,500 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. தமிழக அரசு ஏன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களைப் பாதுகாக்க முயற்சி செய்கிறது?” என்று அமலாக்கத்துறை தரப்பு கேள்வி எழுப்பியது.
மேலும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி, நீர் வளத்துறை அதிகாரி ஒருவரை அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முன்னிலையாகக் கூடாது என்று வற்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இருதரப்பு வாதங்களுக்குப் பின் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

