மதுரை: நகைக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை தெற்கு மாசி வீதியில் இயங்கி வரும் ஜானகி ஜூவல்லர்ஸ் என்ற கடையில், திங்கட்கிழமை இரவு ஏழு மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
அப்போது ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். கடையில் திடீரென தீப்பற்றியதும் பதற்றமடைந்த அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர்.
அப்போது மூன்றாவது மாடியில் பணியில் ஈடுபட்டிருந்த மோதிலால் என்பவரால் கீழே இறங்கிவர முடியவில்லை. தீ வேகமாகப் பரவியதால் 49 வயதான அவர், மூன்றாவது மாடியிலேயே சிக்கிக் கொண்டார்.
இதற்கிடையே, விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயணைப்பு, மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். ஊழியர் மோதிலாலை மீட்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
கடையில் இருந்து தொடர்ந்து கரும்புகை வெளியேறியதால், மோதிலால் எங்கு உள்ளார் என்பதைக் கண்டறிய முடியவில்லை. சுமார் மூன்று மணி நேரத்துக்குப் பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
பின்னர் கடும் தீக்காயங்களுடன் சுயநினைவின்றிக் கிடந்த மோதிலால் மீட்கப்பட்டார். எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அவரைப் பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர் என்று ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் இதே தெற்கு மாசி வீதியில் அமைந்திருந்த நெகிழிப் பொருள்கள் விற்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

