செந்தில் பாலாஜி பிணை மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

2 mins read
dcbae602-1466-4841-9d5a-d8a3b539cf73
மருத்துவப் பரிசோதனைக்காக சிறையில் இருந்து அழைத்துச் செல்லப்படும் செந்தில் பாலாஜி. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் பிணை மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மருத்துவக் காரணங்களை முன்வைத்து பிணை கோர முடியாது என்று அந்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவால் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் சில மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி. அதன் பின்னர் அவரது நீதிமன்றக் காவல் 11 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது பிணை மனுவையும் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், சிறையில் உடல்நலம் குன்றியதை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்குப் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் அவருக்குப் பல்வேறு உடல் கோளாறுகள் இருப்பது தெரிய வந்தது என்றும் உரிய சிகிச்சை இன்றி சிறைவாசம் நீடித்தால் உடல்நலம் மோசமாகிவிடும் என்றும் அவரது தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து மருத்துவக் காரணங்களை முன்வைத்து செந்தில் பாலாஜிக்குப் பிணை வழங்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியது அவரது தரப்பு.

இந்த மனு மீதான விசாரணை நவம்பர் 28ஆம் தேதியான நேற்று நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதிகள், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உள்ள உடல் ரீதியிலான பிரச்சினைகளை மருந்துகள் மூலமாகவே குணப்படுத்திவிட இயலும் எனச் சுட்டிக்காட்டினர். எனவே, மருத்துவக் காரணங்களை முன்வைத்து பிணை கோருவது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்றும் தெரிவித்தனர்.

“தகுதியின் அடிப்படையில் மட்டுமே பிணை மனுவைப் பரிசீலிக்க முடியும். மேலும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி பிணை மனுவை தாக்கல் செய்யலாம்,” என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து மருத்துவக் காரணங்களை முன்வைத்து தாக்கல் செய்த பிணை மனுவை திரும்பப் பெறுவதாக அமைச்சர் தரப்பு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்