சென்னை: போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட சுணக்கத்தை அடுத்து சென்னையில் 68 போலிசார் இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.
அடுத்தகட்டமாக உளவுப் பிரிவைச் சேர்ந்த 132 பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட இருப்பதாக தினத்தந்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருள்களின் புழக்கத்தை அறவே கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த அனைத்து மாவட்ட காவல் துறையினருக்கும் காவல்துறை தலைவர் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், போலிசார் சிலருக்கு கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிய வந்தது என்றும் அதன் பிறகே பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இத்தகைய மெத்தன போக்கையும் முறைகேடுகளையும் தடுக்கும் வகையில் சென்னையில் மட்டும் 132 நுண்ணறிவு பிரிவு காவலர்கள் பணியிடை மாற்றம் செய்ய உள்ளனர் என்றும் ஊடகச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

