கோத்தகிரி: சிறுமிக்கு கைவிலங்கிட்டு அழைத்து வந்த சம்பவம் நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. இது குறித்து விரிவான அறிக்கையை ஆணையத்துக்கு அனுப்பி வைக்கக் கோரியுள்ளது தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்.
கோத்தகிரியில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனுங்கோ தலைமையில், குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் குழந்தைகள் மீதான வன்கொடுமை குறித்து 202 மனுக்கள் பெறப்பட்டன. அப்போது கோத்தகிரியில் ஒரு சிறுமியைக் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற காவல்துறை பற்றி தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு, கருவி அறக்கட்டளை இயக்கம் ஆகியவை இணைந்து 250 பேரிடம் கையெழுத்துப் பெற்று ஆணையத் தலைவரிடம் வழங்கின.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் பிரியங்க் கனுங்கோ, , “கோத்தகிரியில் நவம்பர் 7ஆம் தேதி 15 வயது சிறுமிக்கு காவல்துறை கைவிலங்கிட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த சம்பவம், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நேரில் பேசி, விரிவான அறிக்கையை ஆணையத்துக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமியிடமும் விசாரணை நடத்தியதாகவும் ஆணையர் கனுங்கோ தெரிவித்தார்.
இந்த நிலையில் சிறுமியை கைவிலங்கு போட்டு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படும் தகவல் உண்மையில்லை என்று நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் தெரிவித்துள்ளார்.

