தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமானநிலையப் பெண் பணியாளர்கள் வீட்டிலிருந்து ரூ.5 கோடி தங்கம் பறிமுதல்

2 mins read
8579919c-1d5c-418e-9fdb-bb457c8be567
படம் - ஊடகம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த பணியாளர்களாகப் பணிபுரிந்து வந்த இரு பெண்களின் வீடுகளில் நடத்திய அதிரடிச் சோதனையில் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டுப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சினேகா, 30, சங்கீதா, 28, ஆகிய இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.

துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானம் வழி பெருமளவில் தங்கம் கடத்தப்படுவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையான டி.ஆர்.ஐ.க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கண்காணிப்புப் பணி முடுக்கிவிடப்பட்டது.

வழக்கம்போல், பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பிய சங்கீதா, சினேகாவை டி.ஆர்.ஐ. அதிகாரிகள் பின்தொடர்ந்தனர். ஒரு பெண்ணின் வீடு பல்லாவரத்திலும் மற்றொரு பெண்ணின் வீடு குரோம்பேட்டையிலும் இருந்த நிலையில், இரு பெண்களின் வீடுகளிலும் டி.ஆர்.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள், தங்க உருளைகள், தங்கப் பசைகள் போன்றவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இருவரது வீடுகளில் இருந்தும் 4.7 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து, அந்தப் பெண்களிடம் நடத்திய விசாரணையில் கடத்தல் தங்கம் கைமாறும் விதம் குறித்து தெரியவந்தது.

துபாயில் இருந்து சென்னை வழியாக இலங்கை செல்லும் பயணிகள் விமானங்களில் கடத்தி வரும் தங்கத்தை விமான நிலையத்தில் இவர்கள் வாங்கிக் கொள்வர். அவற்றை தங்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து, சுங்கச் சோதனைகள் எதுவும் இல்லாமல் வீடுகளுக்கு எடுத்து வந்து விடுவர்.

அதன்பின், கடத்தல் கும்பலின் ஆட்கள் வந்து அந்த தங்கத்தையும் வெளிநாட்டுப் பணத்தையும் பெற்றுச் செல்வர் என்பதும் அதற்காக இப்பெண்களுக்கு கணிசமான அளவில் பணம் தரப்பட்டதும் தெரிய வந்தது.

அவர்கள் கூறியது போல், பெண்கள் இருவரிடம் இருந்தும் தங்கத்தை வாங்கிச் செல்வதற்காக முகமது ஹர்ஷத், 27, என்ற கடத்தல் ஆடவர் வந்தார். அவரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மண்ணடியில் உள்ள விமான நிலைய ஒப்பந்த ஊழியர் கலையரசன், 30, வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மண்ணடியில் உள்ள கலையரசன் வீட்டில் சோதனை நடத்தியபோது, 1.5 கிலோ தங்கம் மற்றும் 45 லட்சம் ரூபாய், அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். முகமது ஹர்ஷத், கலையரசனையும் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெளிநாட்டுப் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.5 கோடி ரூபாய் என்று தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்