நாதஸ்வரம் வாசித்து மாநில அளவில் சாதனை படைத்த மாணவி

1 mins read
669cc35c-c49a-4244-a51c-1d3739d41b39
நாதஸ்வரம் வாசிக்கும் மாணவி ஜெயமித்ரா. - படம்: ஊடகம்

ஜோலார்பேட்டை: கடந்த சில ஆண்டுகளாகவே நாதஸ்வரம் கற்றுக்கொள்ள பயிற்சி செய்து வந்த ஜெயமித்ரா என்ற 16 வயது மாணவி, இப்போது மாநில அளவில் நாதஸ்வரம் வாசித்து சாதனை படைத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருள், 42. இவரது மகள் ஜெயமித்ரா, அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பில் படித்து வருகிறார்.

தன் வீட்டில் தந்தையும் தாத்தாவும் நாதஸ்வரம் வாசிப்பதை பார்த்து வளர்ந்த ஜெயமித்ராவுக்கும் நாதஸ்வரம் வாசிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் அவர் கூறியபோது, ஆரம்பத்தில் இதெல்லாம் பெண் பிள்ளைகளுக்கு ஒத்து வராது. முதலில் உன் படிப்பில் கவனம் செலுத்து, பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று மறுத்துவிட்டனர்.

ஆனால், ஜெயமித்ரா தொடர்ந்து நாதஸ்வரம் வாசிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நாதஸ்வரம் கற்றுக்கொள்ள முழு மூச்சுடன் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர், கோவில் திருவிழா, கும்பாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று திறனை வளர்த்து வந்தார். தற்போது, மாநில அளவிலான கலைத் திருவிழாவில் நாதஸ்வரப் போட்டியில் கலந்துகொண்டு 2ஆம் இடத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்