சென்னை: சென்னையில் பேருந்து நிலையத்தில் சுற்றிக்கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் அங்கு நின்றுகொண்டிருந்த பேருந்தில் ஏறி அதனை ஓட்டியதால் அதில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வண்டலூரில் இருந்து பிராட்வே பேருந்து நிலையத்துக்கு புதன்கிழமை மதியம் மாநகரப் பேருந்து 21G வந்தது. ஓட்டுநர் இளங்கோவனும் நடத்துநர் கோவிந்தராஜனும் நேரக் காப்பாளரின் வருகைப் பதிவேட்டில் எழுதுவதற்காகச் சென்றனர். அப்போது ஓட்டுநர் இளங்கோவன் பேருந்திலேயே சாவியை விட்டுச் சென்றிருந்தார்.
இந்த சமயத்தில் அங்கு சுற்றிக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது ஆடவர் ஒருவர் திடீரென பேருந்துக்குள் சென்று ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்கினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறினர். பேருந்து பிளாட்பாரத்தின் இரும்புக் கம்பத்தில் மோதி நின்றது.
அதனைத்தொடர்ந்து, பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் பதறியடித்து ஓடி வந்தனர். மனநலம் பாதிக்கப்பட்டவரை பிடித்து எஸ்பிளனேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பின்னர் அவர் கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இந்தச் சம்பவம் தொடர்பில் துறை ரீதியில் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

