வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து வந்த லாரிமீது சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வேன் ஓட்டுநர் உட்பட மூவர் பலியாகினர்.
இது குறித்துத் தகவலறிந்து விரைந்துவந்த வாழப்பாடி காவல்துறையினரும் தீயணைப்பு படையினரும் அங்கிருந்த சுங்கச்சாவடி பணியாளர்களுடன் சேர்ந்து பாரந்தூக்கியைப் பயன்படுத்தி 3 பேர் உடலையும் மீட்டனர்.
மீட்கப்பட்ட உடல்களை உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநர் படுகாயமடைந்தார். அவரையும் மீட்ட காவல்துறை சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
இந்த கோர விபத்துக் குறித்து வாழப்பாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.