புதுடெல்லி: தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தமிழக ஆளுநர்தான் தீர்வுகாண வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இல்லையெனில், இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டுத் தீர்வுகாண நேரிடும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கவில்லை. இதுதொடர்பான கோப்புகள் நீண்டகாலமாக ஆளுநர் மாளிகையில் முடங்கிக் கிடப்பதாக கண்டனம் தெரிவித்த தமிழக அரசு, இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
தமிழக அரசின் வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை அழைத்து பிரச்சினை குறித்து பேசித் தீர்வுகாண வேண்டும் என தமிழக ஆளுநருக்கு அறிவுறுத்தியுள்ளது.
“தமிழக ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே தீர்க்கப்பட வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. முதல்வருடன் அமர்ந்து பேசி இவற்றுக்கு ஆளுநர் தீர்வு கண்டால் பாராட்டுவோம்.
“முதல்வரை ஆளுநரே அழைத்தால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறோம்,” என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 11-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்.
முன்னதாக வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை நோக்கி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
“சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த மசோதாக்களை அதிபருக்கு மீண்டும் அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. முதன் முறையாக மசோதா ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டபோதே ஆளுநர் அதை அதிபருக்கு அனுப்பி இருக்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
“ஆனால் அம்மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளார். அம்மசோதாக்கள் மீண்டும் சட்டப் பேரவைக்கு அனுப்பப்பட்டு மீண்டும் அவை பேரவையில் நிறைவேற்றப்பட்டன. அதன் பின்னர் அம்மசோதாக்களை எவ்வாறு அதிபருக்கு அனுப்ப முடியும்?” என மத்திய அரசுத் தரப்பை நோக்கி தலைமை நீதிபதி சந்திரசூட் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

