பள்ளிக்குச் செல்ல பாதை இல்லை: பதாகை மூலம் முறையிட்ட சிறுவன்

பள்ளிக்குச் செல்ல பாதை இல்லை: பதாகை மூலம் முறையிட்ட சிறுவன்

1 mins read
211f6f82-c5a6-4b8d-8b39-b0eec7e927ed
சிறுவனின் படத்துடன் கூடிய பதாகை. - படம்: ஊடகம்

புதுக்கோட்டை: பள்ளிக்குச் செல்ல பாதை இல்லாததால் தாம் பெரிதும் அவதிப்படுவதாக புதுக்கோட்டையைச் சேர்ந்த சிறுவன் புகார் எழுப்பியுள்ளான்.

ஐந்தாம் வகுப்பு படித்து வரும் இனியவன் என்ற அம்மாணவன் இனி தாம் பள்ளிக்குச் செல்லப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளான்.

இதைக் குறிப்பிடும் வகையில் தன்வீட்டின் முன்பு சிறுவன் வைத்துள்ள பதாகை பொதுமக்களைக் கவர்ந்ததுடன் சில விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

இனியவனின் வீட்டிலிருந்து முக்கிய சாலைக்குச் செல்லும் வழியில் உள்ள அன்னதான காவேரி என்ற வாய்க்கால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டதால் சாலைக்கு செல்ல வசதி இன்றிப் போனது. இதனால் அருகில் உள்ள வாய்க்காலில் இறங்கி நடந்து சாலையைச் சென்றடைய வேண்டி உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் போராட்டங்கள் நடத்தியும் தீர்வு கிடைத்தபாடில்லை என்கிறார் சிறுவனின் தந்தை செல்வம்.

வாய்க்கால் பகுதி சேரும் சகதியுமாக இருப்பதாகவும் தினமும் பள்ளிக்குச் செல்வது சிரமமாக இருப்பதாகவும் சிறுவனின் படத்துடன் கூடிய பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை பாதை அமைத்து தராமல் இருந்த அதிகாரிகளுக்கு நன்றி என்றும் சாலை இல்லாததால்தான் தாம் பள்ளிக்குச் செல்லவில்லை என்றும் இனியவன் குறிப்பிட்டுள்ளான்.

குறிப்புச் சொற்கள்
மாணவர்