கோவை நகைக்கடை கொள்ளை: பக்கபலமாக இருந்த மனைவி

1 mins read
2970026c-c033-41b1-8f70-bcd09b5af2e8
நகைக்கடை, கொள்ளையடித்த விஜய். - படங்கள்: ஊடகம்

கோவை: கோவை நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வரும் கொள்ளையன் விஜய் விரைவில் பிடிபடுவார் என்று கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தக் கொள்ளை விவகாரத்தில் விஜய்க்கு அவரது மனைவி நர்மதா பக்கபலமாக இருந்தது தெரிய வந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

கோவையில் இயங்கி வரும் ஜோஸ் ஆலூக்காஸ் நகைக்கடையில் இருந்து மொத்தம் 4.6 கிலோ நகைகளை கொள்ளை அடித்துள்ளார் விஜய். அவர் மீது ஏற்கெனவே மூன்று திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனினும் அவரது மனைவி மீது எத்தகைய வழக்கும் இதுவரை பதிவாகவில்லை.

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் ஒரு பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததால் எச்சரிக்கை மணி (அலாரம்) அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கொள்ளை அடித்துள்ளார் விஜய்.

இந்த கொள்ளையை அரங்கேற்றுவதற்கு உறுதுணையாக இருந்த விஜய்யின் மனைவி நர்மதாவிடம் இருந்து மூன்று கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டம் அருர் பகுதியில் பதுங்கி இருந்த விஜய்யை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது அவர் தப்பி விட்டார். அவரைக் கைது செய்யும் பட்சத்தில் திருடப்பட்ட மொத்த நகைகளும் மீட்கப்பட்டுவிடும் என்றும் தனிப்படை போலிசார் அவரை நெருங்கி விட்டனர் என்றும் ஆணையர் பாலகிருஷ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்