ரூ.20 லட்சம் லஞ்சம்: அமலாக்கத்துறை அதிகாரி அதிரடிக் கைது

2 mins read
7998909f-8e86-4de5-b715-bab45a4ce33e
அங்கிட் திவாரி, அவர் பயன்படுத்திய கார். - படங்கள்: ஊடகம்

சென்னை: அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி என்பவரை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து அவர் பணியாற்றிய மதுரை துணைமண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி விடிய விடிய சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றும் சுரேஷ் பாபு என்ற மருத்துவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில், மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்க அங்கிட் திவாரி ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து முதல் தவணையாக இருபது லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார் சுரேஷ் பாபு. எனினும் மேலதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி மேலும் 51 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார் அங்கிட் திவாரி. இதனால் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தார் மருத்துவர் சுரேஷ் பாபு.

அதன்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் 31 லட்சத்தை அங்கிட் திவாரியிடம் கொடுத்துள்ளார் சுரேஷ் பாபு. அதை பெற்றுக் கொண்டதும் அமலாக்கத்துறை அதிகாரி சம்பவ இடத்திலிருந்து உடனடியாக ஓட்டம் பிடித்தார் என்றும் அவரை துரத்திச் சென்று மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வழிமறித்துக் கைது செய்ததாகவும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்தனர்.

அவரிடம் இருந்து லஞ்சப் பணம் ரூ.31 லட்சம் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து அங்கிட் திவாரியிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர் யாருடன் கூட்டு சேர்ந்து லஞ்சம் பெற்றார், இதுவரை யார் யாரிடம் இருந்து லஞ்சம் பெற்றுள்ளார் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்புக் கருவிகளில் கடந்த ஒரு மாதத்தில் பதிவான காணொளிகளை வழங்க அமலாக்கத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த அலுவலகத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தனர்.

வீட்டிலும் அலுவலகத்திலும் அங்கிட் திவாரி பயன்படுத்திய மூன்று மடிக்கணினிகள் கைப்பற்றப்பட்டன. அமலாக்கத்துறை அலுவலகம் ஒன்றில் மாநில காவல் துறையினர் சோதனை நடத்தி இருப்பது இந்திய அளவில் இதுவே முதல் முறை என தினத்தந்தி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இந்நிலையில் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் அங்கிட் திவாரி லஞ்சம் பெற்ற காணொளி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் பலபேரிடம் லஞ்சம் பெற்றதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் குவித்து இருக்கலாம் என்று லஞ்ச ஒழிப்பு போலிசார் கருதுகின்றனர்.

இதற்கிடையே, அமலாக்கத்துறை மீதான நம்பகத்தன்மை குறைந்து விட்டதாக அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்து விட்டதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஒரு தனி மனிதர் செய்த தவற்றை அடிப்படையாக வைத்து ஒட்டுமொத்த துறை குறித்தும் தவறாகப் பேசக்கூடாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்