சென்னை: சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனையைத் தொடங்கியுள்ளனர்.
சென்னை புரசைவாக்கத்தில் மட்டும் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. டி.வி.எச். லும்பானி ஸ்கொயர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அமித் என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.
தமிழக அரசுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மின்சார சாதனங்களை வினியோகித்து வந்தார் அமித். இவர் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மூலம் வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாகத் தெரிகிறது.
அமித் வீடு இருக்கும் பக்கத்து தெருவில் உள்ள ஜெயின் வில்லா அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் மகேந்திரா பி.ஜெயின் என்பவரது வீட்டிலும் அவரது இளைய சகோதரர் ரமேஷ்குமார் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இதேபோல் சென்னையில் மேலும் இரண்டு இடங்களில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்ட சந்தேகத்தின்பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
மேலும் புரசைவாக்கம் கிளெமென்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வரித்துறை அதிகாரிகள் சோதனை
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ரசாயன ஆலை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் இந்த ஆலைக்குச் சொந்தமான பல்வேறு இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் காரணமாக இன்று அதிகாலை முதல் இந்த சோதனை நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது.