சென்னை: தமிழக ஆளுநர் தி.மு.க அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி தரும் வகையில் செயல்பட்டுவருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆளுநரின் உச்சந்தலையில் நீதிமன்றம் கொட்டுவைத்துள்ளது என்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் குறிப்பிட்டார். “பல்கலைக்கழக வேந்தர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு சட்டப் பேரவையில் மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது ஆனால் அவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பது அரசியல் அமைப்புக்கு எதிரான சட்ட விரோதப் போக்கு.
“தன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்று ஆளுநர் கருதுகிறார். தமக்குப் பெரிய அதிகாரம் இருப்பதாக நினைத்துக் கொண்டு இறுமாப்புடன் இருந்த நிலையில் ஆளுநரின் தலையில் உச்சநீதிமன்றம் கொட்டு வைத்து உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை ஆளுநர் மதிப்பார் என நம்புகிறேன்,” என்று திருமாவளவன் மேலும் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே, “தமிழகத்தில் ஆளுநரும் முதல்வரும் சண்டை போடுவதற்குப் பதிலாக ஒன்றாக அமர்ந்து பேசினால் மக்களுக்கு பல நல்ல திட்டங்கள் கிடைக்கும்,” என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

