சென்னை: தமிழகம் முழுவதும் 500 மதுபானக் கடைகளை மூடும்படி டாஸ்மாக் நிர்வாகம் 2022 ஜூன் 20ஆம் தேதி உத்தரவிட்டது. அந்தக் கடைகளை வாடகைக்கு விட்டிருந்த கட்டட உரிமையாளர்கள் இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுத்தனர்.
இந்த வழக்குகள் மீதான விசாரணை, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக நடந்தது.
“ஒப்பந்தம் காலாவதியாவதற்குள் திடீரென 500 கடைகள் மூடப்பட்டதால் எங்களுக்கான வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.
“கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளை மட்டுமே மூடுவது என விதிகள் உள்ள நிலையில், அதற்குப் புறம்பாக எங்களது கட்டடங்களில் இயங்கி வந்த மதுபானக் கடைகளை மூடியிருப்பது விதிகளுக்கு புறம்பானது,” என்று கட்டட உரிமையாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது
அரசுத் தரப்பில் முன்னிலையான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வந்த கட்டடங்களின் உரிமையாளர்கள் தங்களது குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்தான் தெரிவிக்க வேண்டுமேயன்றி, நீதிமன்றத்தை நாட முடியாது,’’ என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘தனது தொழிலை நடத்துவதா மூடுவதா என்பதை வாடகைதாரர்தான் தீர்மானிக்க முடியும். அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு. அதைத் தாண்டி, கடையைத் திறக்க வேண்டும் என கட்டட உரிமையாளர்கள் கோர முடியாது,” என்றார்.
மேலும், “பொதுநலனை கருத்தில்கொண்டு மதுபானக் கடைகளை மூடியது தொடர்பான அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது,’’ எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

