கோயில் பிரசாதத்தில் நஞ்சு கலந்து கொடுத்து குழந்தைகளைக் கொன்ற தந்தை

கோயில் பிரசாதத்தில் நஞ்சு கலந்து கொடுத்து குழந்தைகளைக் கொன்ற தந்தை

2 mins read
3ed8cdfb-352a-4b1f-b64a-f64f63e1e3c4
தங்களது குழந்தைகளுடன் பெற்றோர். - படம்: ஊடகம்

கிருஷ்ணகிரி: குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவர் தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கலந்த கோயில் பிரசாதத்தைக் கொடுத்து கொல்ல முயன்றுள்ளார். அப்படியும் இறந்து போகாததால் குழந்தைகளின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார் தந்தை. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது.

காவலர்கள், இறந்த குழந்தைகளின் உடல்களை மீட்டு உடல் கூறு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து நாகரசம்பட்டி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவேரிப்பட்டணம் அருகே உள்ள என். தட்டக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கடலரசு, 32. தொழிலாளி. இவருக்கு திவான்ராஜ், 4, என்ற மகனும் நிவன்திக்கா, 2, என்ற மகளும் இருந்தனர்.

கடலரசுவுக்கும் அவரது மனைவி ஜனனிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வழக்கம்போல் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து, தன் கணவரிடம் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் ஜனனி இலக்கியம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

அதன்பின்னர் இரு குடும்பத்தினரும் கணவன்-மனைவி இருவரையும் சமாதானம் செய்து வைத்ததைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜனனி கணவர் வீட்டுக்குச் சென்று வசித்து வந்தார்.

இந்நிலையில், கடலரசு சனிக்கிழமை அன்று பெரியமலை தீர்த்தம் கோவிலில் குடும்பத்துடன் சாமி கும்பிட்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, மலை அடிவாரத்தில் வழங்கப்பட்ட பிரசாதத்தை வாங்கிய அவர், அதில் விஷம் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதை உண்ட குழந்தைகள் அங்கேயே மயங்கி விழுந்து உயிருக்குப் போராடியுள்ளனர்.

இதையடுத்து, இரு குழந்தைகளின் கழுத்தையும் நெரித்துக் கொன்றுள்ளார் கடலரசு. பின்னர், மனைவி ஜனனிக்கும் விஷம் கலந்த பிரசாதத்தைக் கொடுத்துவிட்டு, தானும் அதனை உண்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜனனி சத்தம் போடவே, அங்கிருந்த பொதுமக்கள் கணவன், மனைவி இருவரையும் மீட்டு அவசர சிகிச்சை வாகனத்தில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்
கோயில்