சென்னை: தமிழகத்தைச் சூழ்ந்துள்ள மிச்சாங் புயலால் கடலோர மாவட்டங்களில் அதிவேக காற்று வீசுகிறது. 24 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டித் தீர்க்கிறது.
சென்னை உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ரயில் நிலையங்கள், சாலைகள், எங்கும் மழை நீர் பெருக்கெடுத்தோடுகிறது. வெள்ளத்தில் வாகனங்கள் அதிவேகமாக அடித்துச் செல்லப்படுகின்றன.
சென்னையில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
தாழ்வான இடங்கள், சுரங்கப் பாதைகள், வீடுகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக இருப்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சென்னை நகரமே நிலைகுத்தி உள்ளது. ரயில், பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகளில் வெள்ளம் நிறைந்துள்ளதால் சென்னையின் முக்கிய சுரங்கப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கிறன. கடைகள் மூடப்பட்டுள்ளன. மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினரும், ராணுவ வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
புயல் திருவள்ளூர் மாவட்டத்தில் நிலை கொண்டு உள்ளதால் திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகள் தத்தளித்து வருகிறது. இன்று செவ்வாய்க்கிழமை காலை வரை 50 சென்டி மீட்டர் மழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இதுவரை 120 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
சென்னை விமான நிலையப் பகுதியில் 250 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளதால் விமான நிலையத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது.
தொடர் மழையால் விமான சேவை பாதிக்கப்பட்டதுடன், விமான நிலையம் திங்கட்கிழமை முழுவதும் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. சென்னைக்கு வரும் அனைத்து விமானங்களும் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டன.
சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து திங்கட்கிழமை அதிகாலை வந்து இறங்கிய பயணிகள் விமான நிலையத்திலேயே அமரவைக்கப்பட்டு இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேளச்சேரியில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று தரையில் இறங்கியது. தீயணைப்புப்படை வீரர்கள் இருவரை மீட்டுள்ளதுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வங்க கடல் பகுதியில் கடந்த 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர், அது அதிதீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் அதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது.
புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் ஞாயிறு காலை முதலே மழை கொட்டத் தொடங்கியது.
இதனால் ஏரிகள் பலவும் நிரம்பி உபரி நீர் பெரும் வெள்ளமாக பாய்ந்தோடுகிறது.
அடையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர், கடும் கடல் சீற்றம் காரணமாக வெள்ள நீர் கடலுக்குள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்த புயல் தீவிர புயலாக வலுப்பெற்று செவ்வாய் முற்பகல் ஆந்திராவின் நெல்லூருக்கும்-மசூலிப்பட்டினத்திற்கு இடையே இடையே தீவிர புயலாகக் கடக்கக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்திலும் இடையிடையே 110 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு டிசம்பர் 4ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டது.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், புயலால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் தேடல், மீட்பு நிவாரண நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் தேசிய பேரிடர் மீட்புப் படையுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளவதாகக் குறிப்பிடப்பட்டது.
புயல் பாதிப்பு தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக கேட்டறிந்துள்ளார்.
மீட்புப் பணிகளுக்கு கூடுதலாக மீட்புப் படையினரை அனுப்பி வைப்பதாகவும் அவர் உறுதி கூறியதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.