தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லஞ்சப் பணத்தை ஏழு அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்ட அங்கித் திவாரி

2 mins read
c58d5aec-3d09-4591-b790-ddb2a1ac6709
அங்கித் திவாரி. - படம்: தமிழக ஊடகம்
அங்கித் திவாரி.
அங்கித் திவாரி. - படம்: ஊடகம்

திண்டுக்கல்: அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவரை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் ஒரு சில தினங்களுக்கு முன் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் பெற்ற லஞ்சப் பணத்தை மற்ற ஏழு உயர் அதிகாரிகளுடன் பங்கிட்டுக்கொண்டுள்ளதாக அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றும் சுரேஷ் பாபு என்ற மருத்துவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு செய்தது.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில், மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்க மருத்துவரிடம் அங்கிட் திவாரி ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து முதல் தவணையாக இருபது லட்சம் ரூபாயை சுரேஷ் பாபு லஞ்சமாக வழங்கியபோது, அங்கித் திவாரி லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்குத் தொடர்பில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அங்கித் திவாரியுடன் இதர ஏழு அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து பணத்தை பங்கிட்டுக்கொண்டது தெரிந்தது.

அவர் இதற்கு முன்பு பல சம்பவங்களில் இதுபோல் வாங்கிய லஞ்சப் பணத்தை பங்கிட்டுக் கொண்டதாகவும் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை காவல் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் அங்கித் திவாரி. கடந்த 2018ல் உதவி அமலாக்கத்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்துள்ளார்.

“அதன் பின்னர் பதவி உயர்வு பெற்று, கடந்த ஏப்ரல் மாதம் முதல் மதுரையில் உள்ள துணை இயக்குநர் அலுவலகத்தில் விசாரணை அதிகாரியாகப் பணிபுரிந்துள்ளார்.

“எம்.என். நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிய அவர், சில உயரதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் மற்றவர்களும் லஞ்சம் வாங்க உடந்தையாக இருந்துள்ளார்.

“அங்கித் திவாரியுடன் சேர்ந்து ஏழு அதிகாரிகள் பெரும் தொகை தரும்படி வழக்கில் சிக்குபவர்களிடம் பேரம் பேசுவதையும் அதில் கிடைக்கும் பணத்தை தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதையும் வாடிக்கையாக வைத்திருந்ததாகத் தெரிகிறது.

“அந்த அதிகாரிகளின் பெயர், விவரங்களைப் பெற அங்கித் திவாரியை மேலும் ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்.

“அவரிடம் இருந்து தகவல்களைப் பெற்றபின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்பவும் முடிவு செய்துள்ளோம்,’’ என்றார்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக உணவு ஏதும் உண்ணாமல் அங்கித் திவாரி அழுது கொண்டே இருப்பதாகவும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாலும் மனநல ஆலோசகர், தற்கொலை தடுப்பு ஆலோசகர் உள்ளிட்டோர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, திண்டுக்கல் ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவியல் முதன்மை நீதித்துறை நடுவர் மோகனாவிடம் பிணை வழங்கக் கோரி அங்கித் திவாரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்