தண்டோரா போட்டு மீட்கப்பட்ட 15 பவுன் நகை, ரூ.3.15 லட்சம் ரொக்கம்

தண்டோரா போட்டு மீட்கப்பட்ட 15 பவுன் நகை, ரூ.3.15 லட்சம் ரொக்கம்

2 mins read
680296e5-9de4-41d8-8ca9-6229200c4d15
தண்டோரா போட்டு மீட்கப்பட்ட பணம், நகை. - படம்: தமிழக ஊடகம்

வாடிப்பட்டி: வீட்டில் திருட்டு போன 15 பவுன் நகை, ரூ.4.45 லட்சம் ரொக்கம் குறித்து தண்டோரா போடப்பட்டதை அடுத்து, திருடியவர் அவற்றைக் கொண்டு வந்து வீட்டு வாசலில் எறிந்துவிட்டு சென்றுள்ள சம்பவம் சமயநல்லூரில் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம், சமயநல்லுார் அருகே உள்ள கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் கண்ணன், 32. தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவரது வீட்டின் பீரோவில் இருந்து நவம்பர் 29ஆம் தேதியன்று 15 பவுன் நகையும் ரூ.4.45 லட்சம் பணமும் திருட்டு போனது.

இதுகுறித்து சமயநல்லுார் காவலர்கள் விசாரணை நடத்தி வந்த நிலையில், கிராமப் பெரியவர்கள் ஒன்றுகூடி ஒரு முடிவெடுத்தனர்.

அதன்படி, ஞாயிறன்று இரவு அங்குள்ள விநாயகர் கோயில் முன்பு பெரிய தொட்டி ஒன்றை வைத்து வீடுகள்தோறும் வண்ண உறை ஒன்றைக் கொடுத்தனர்.

“திருடியவர்கள் நகை, பணத்தை அந்த உறைக்குள் வைத்து அங்கு வைக்கப்பட்டுள்ள தொட்டிக்குள் போட்டுவிட வேண்டும்.

“திருடியவர் யாரென்று நாங்கள் அடையாளம் காண விரும்பவில்லை. யாருக்கும் தெரியாமல் போட்டுவிட்டுச் சென்றுவிடுங்கள்,” என தண்டோரா போட்டு அறிவிப்பு செய்தனர்.

இதற்கு தகுந்தாற்போல் இரவில் மின்சாரமும் நிறுத்தப்பட்டது.

காலையில் எழுந்து பார்த்தபோது திருட்டுபோன கண்ணன் வீட்டு வாசலில் 15 பவுன் நகை, ரூ.3.15 லட்சம் ரொக்கப் பணமும் ஓர் உறைக்குள் இருந்தது.

நவம்பர் 24ஆம் தேதியன்று மதுரை திருமங்கலம் பெரிய பொக்கம்பட்டியில் வீட்டில் நகை திருட்டு போன சம்பவத்திலும் இதேபோன்று கிராம மந்தையில் அண்டா வைத்து நகை மீட்கப்பட்டது.

அதே முறையை இப்போது சமயநல்லுார் பகுதியிலும் பின்பற்றி நகையை மீட்டுள்ளனர்.

இதையடுத்து, திருட்டுச் சம்பவத்திலும் ‘திருமங்கலம் பார்முலா’ என தற்போது இந்த நிகழ்வு பிரபலமாகி உள்ளது.

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின் போது பணம் வழங்கி வெற்றிபெற்ற முறைக்குத் திருமங்கலம் ஃபார்முலா (திருமங்கலம் சூத்திரம்) என்ற பெயர் உருவானது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்