தென்காசி: குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் சுவாமி கோயிலில் பழமையான ஐந்து செப்புப் பட்டயங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தமிழக அரசு அமைத்த சுவடி திட்டப்பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தாமரைப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அங்கு மேலும் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் அரிய பழஞ்சுவடிகளையும் செப்புப் பட்டயங்களையும் திரட்டி நூலாக்கம் செய்ய சுவடி திட்ட பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் பல்வேறு கோவில்களில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தென்காசி மாவட்டம் குற்றாலநாதர் சுவாமி கோயிலில் மேற்கொண்ட ஆய்வின்போது ஐந்து புதிய செப்புப் பட்டயங்களை கண்டெடுத்தாக அக்குழுவினர் தெரிவித்தனர். “அந்தச் செப்புப் பட்டயங்களை படி எடுத்து ஆய்வு செய்தேன். அவற்றில் 2 செப்புப் பட்டயங்கள் அழகன்பெருமாள் பாண்டியன் மற்றும் சீவலவரகுணராம பாண்டியன் ஆகியோரைப் பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன.
“திருப்பதிக பாடல்கள், திருஅங்க மாலை பதிகம், காசிமடம் திருப்பனந்தாள் என்ற குறிப்பு, திருவெம்பாவை பாடல்கள், குமர குருபர சுவாமிகள் எழுதிய பாடல்களும் உள்ளன.
“அழகன்பெருமாள் பராக்கிரம பாண்டியனின் காலம் கி.பி.1473 - 1506 வரை என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
“சீவல வரகுணராமபாண்டியன் கி.பி.1613-1618 காலக்கட்டத்தில் ஆட்சி செய்ததாக கல்வெட்டுகள் வழியாக அறிய முடிகிறது,” என்றார் தாமரைப் பாண்டியன் தெரிவித்தார்.